கோவை | நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 3 பேர் உயிரிழப்பு.. மத்திய அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை.!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (55). இவர் பொள்ளாச்சியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனா (48) இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமார் மற்றும் மீனா, பொள்ளாச்சி சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு என்பவருடன் சேர்ந்து கடந்த 7-ம் தேதி நேபாளத்திற்கு 13 நாட்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.
பொள்ளாச்சியில் இருந்து சென்னை சென்று, அங்கிருந்து கங்கா காவேரி ரயில் மூலம் அலகாபாத் சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு, திரிவேணி சங்கமம் அயோத்தி முக்திநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர், நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத்தலமான மனகாமனா திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்து விட்டு வேனில் திரும்பும் போது நேற்று, காந்தர் என்ற மலைப்பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் வேனில் பயணம் செய்த ஏழு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அதில், பொள்ளாச்சி மின் நகரைச் சார்ந்த முத்துக்குமார், அவரது மனைவி மீனா மற்றும் சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு ஆகியோர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக மத்திய மாநில அரசுகள் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்மீக சுற்றுலா சென்று விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

