பாமக எம்.எல்.ஏக்கள் 3 பேர் கட்சியிலிருந்து இடைநீக்கம்!
பாமக சட்டமன்ற உறுப்பினர்களான சிவக்குமார், வெங்கடேசுவரன், சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் பாலு போன்றோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் அறிவித்திருக்கிறார்.
அந்த அறிக்கையில், சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் என மூன்று பாமக எம்.எல்.ஏக்களும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி மூலம் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கட்சியின் தலைமை நிர்வாக்குழு ஜிகே மணி மூலம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த அறிக்கையில், “அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்களை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரனையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரனை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்” என அன்பழகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், “விசாரணைக்குழு அவர்கள் நால்வரையும் விசாரனைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க திமுக அரசு மறுப்பதாகக் கூறி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவக்குமார் போன்றோரும் வழக்கறிஞர் பாலுவும் கலந்துகொண்டனர். இந்நிலையில்தான் இவர்கள் நால்வரும் பாமகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.