சேலம்: இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி- அதிர்ச்சி பின்னணி
சேலத்தில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் மாநகர எல்லைக்கு உட்பட்ட தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து கடந்த சில மாதங்களாக சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வறுமையில் வாடும் இளம் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட இளம் பெண்கள் ஆகியோரை குறிவைத்து அவர்களிடம் பணம் சம்பாதிப்பதற்கான ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.
மேலும் அந்த இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் முயற்சி செய்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் பிரதீப், சிவா ஆகியோரை கைது செய்து ரகசிய விசாரணை செய்தனர்.
விசாரணையில் லோகநாதன் அவரது மனைவி உள்ளிட்ட அவரது குடும்பமே, இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் பெண்களை வைத்து தொழிலதிபர்கள் சிலரை தங்கள் வலையில் விழ வைத்த இந்த கும்பல் அவர்களையும் ஆபாசமாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
தற்போது லோகநாதனின் தந்தை ரகுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தலைமறைவாக உள்ள லோகநாதனின் மனைவியையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெண்களையும் தொழிலதிபர்களையும் ஆபாச படம் எடுக்க பயன்படுத்திய செல்போன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் இந்த மோசடிக் கும்பல் வலையில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து பட்டியல் தயாரித்து வருகின்றனர். இதுவரை இளம்பெண்கள் 6 பேர் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.