8 மாத கைக்குழந்தை உட்பட மூன்று பேர் கழுத்தறுத்து கொலை: கள்ளக்குறிச்சியில் நடந்த கொடூரத்தின் பின்னணி!

கள்ளக்குறிச்சி அருகே 8 மாத கைக் குழந்தை உட்பட மூன்று பேர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Police
Policept desk

கடலூர் மாவட்டம் ஆலடி பாலக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் - வளர்மதி தம்பதியர். இவர்களுக்கு தமிழரசன் (11) என்ற மகனும், கேசவன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில் வாகனம் மூலமாக கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் காய்கறி விற்பனை செய்து வந்த மணிகண்டன் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வளர்மதி தனது இரண்டு குழந்தைகளுடன் நரிமேடு பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வளர்மதி வீட்டின் வெளிப்புறம் கதவு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார், கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் வளர்மதி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து 3 சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி-கள் திருமேனி மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடைபெற்ற இடத்தில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழுப்புரத்திலிருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் தொழில் நுட்ப முறையிலும் குற்றவாளிகளை நெருங்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com