நெல்லையில் விபத்து : கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி - வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் கார் , பைக் மோதிய விபத்தில் கர்ப்பிணிப் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் சுப்பிரமணியன். அரசுடைமை வங்கி ஊழியரான இவர் நேற்று அகஸ்தியர்பட்டியில் இருந்து முக்கூடலுக்குத் தனது காரில் சென்றுள்ளார். அதேபோல், பாப்பாக்குடி குமாரசாமியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாதவன்துரை(38), அவரது நிறை மாத கர்ப்பிணி மனைவி ராஜேஸ்வரி(30), அவரது 5 வயது மகன் பாரதிராஜா ஆகியோருடன் முக்கூடலில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்து குமாரசாமியாபுரம் செல்வதற்காக பைக்கில் வந்துள்ளார்.
அப்போது இரு வாகனங்களும் கடையம் சாலையில் உள்ள அரிராம் நகர் விலக்கில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், பைக்கில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டதில் அவர்கள் மீதே கார் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மாதவன்துரையும் அவரது மகன் பாரதிராஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ராஜேஸ்வரி 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்ட்ட நிலையில் அவரும் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நிகழ்த்தப்பட்ட உடற்கூறு ஆய்வின் போது வயிற்றில் உள்ள சிசுவும் உயிரிழந்தது தெரியவந்தது.
விபத்து நடைபெற்ற இடத்தில் சேரன்மகாதேவி ஏஎஸ்பி பிரதீப், சேரை வட்டாட்சியர் கனகராஜ், அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சுபாஷினி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். விபத்து தொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.