சிசிடிவியில் பதிவான வழிப்பறி முயற்சி - போலீசார் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் முதியவர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்ய முயன்ற சம்பவம் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.
ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் அந்த முதியவரை வழிமறித்து அவரை கடுமையாக தாக்கி முதியோர் கையில் இருந்த பையையும் பிடுங்க முயற்சித்துள்ளனர்.
அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் யாரும் முதியவருக்கு உதவாமல் விலகிச்சென்றனர். இதனால் முதியவர் பதை பதைக்க அங்கிருந்து விலகி ஓடினார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இதனைக்கொண்டு விசாரித்தபோது அந்த முதியவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பதும், திருமண விழா ஒன்றுக்கு வந்த போது இந்த சம்பவம் நடந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். முதியவரிடம் வழிப்பறி செய்ய முயன்றவர்களை ஆரணி காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.