தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழகத்திற்கான தேசிய சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியாகியுள்ள தகவலில், 18 வயது இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், துபாயில் இருந்து திரும்பிய 63 வயது முதியவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முதியவர் தற்போது வாலாஜா அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தாய்லாந்து நாட்டினருடன் பழகிய 66 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தற்போது பெருந்துறை மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23ல் இருந்து 26ஆக உயர்ந்துள்ளது.

