சீர்காழி: கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்களின் மீது மோதிய பேருந்து – 3 பேர் உயிரிழப்பு
செய்தியாளர்: ஆர்.மோகன்
நெய்வேலியில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து கதிராமங்கலம் கடைவீதியில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது வலதுபுறம் சென்ற 2 இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த கதிராமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஜெயசீலன் மற்றும் எதிரே வந்த ஆலவெளி கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய போலீசார், மூன்று உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடி தலைமறைவான தனியார் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.