இணையதள சேவை முடக்கத்திற்கு எதிரான முறையீடு: மனுவை ஏற்பதில் சிக்கல்
இணையதள சேவை முடக்கத்திற்கு எதிரான முறையீட்டை உயர்நீதிமன்றத்தில் விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் கோரிக்கை வைத்தார். வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது.
இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனுத்தாக்கல் செய்த போது இணையதள சேவை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை உள்ளிட்டவைகளுடன் சிபிஐ விசாரணை வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார். வழக்கறிஞர் சூரியபிரகாசம், காலை முறையீடு செய்யும் போது சிபிஐ விசாரணை குறித்து முறையீடு செய்யாததால் இந்த மனுவை வழக்காக எடுப்பதில் நீதித்துறையில் சிக்கல் இருப்பதாக பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்து நீதிபதியிடம் விளக்கம் கேட்ட போது காலையில் சிபிஐ விசாரணை என்ற முறையீடு வைக்கவில்லை இப்படி இருக்க இந்த வழக்கை எப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். மேலும் தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்றுதான் வழக்காக எடுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தார். இதுதொடர்பாக தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் சூரிய பிரகாசம் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த வழக்கில் ஆஜராக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதி இந்த முறையீட்டை வழக்காக ஏற்க முடியாது எனவும் தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞரை அனுமதி பெற்று வர சொல்லி அனுப்பிவிட்டதாகும் தாங்கள் எதற்காக வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். அப்போது இந்த முறையீடு வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டால் தமிழக அரசு சார்பில் ஆஜராக வந்ததாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு என்ன மாதிரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் நர்மதா சம்பத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூட்டிற்கு முன்பாக நடந்த கல்வீச்சில் காயமடைந்த காவலர்கள் வேறு மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.