தருமபுரி: கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து – முதியவர்கள் மூன்று பேர் உயிரிழப்பு
செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம் பாலாவாடி அடுத்த கானாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சை (70), முனுசாமி (65), மணி (63) ஆகிய மூவரும் தங்கள் கிராமத்தில் இருந்து பாலக்கோடு அருகே உள்ள கேசர்குளியல்லா அணையில் நடைபெற்ற உறவினரின் ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதையடுத்து ஈமச்சடங்கு முடிந்த பின் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர்.
அப்போது தருமபுரி-ஓசூர் நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில் செல்வதற்காக, சாலையில் எதிர்புறமாக சென்றுள்ளனர். அப்போது ஓசூர் நோக்கி சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த பச்சை என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மணி மற்றும் முனுசாமி ஆகிய இருவரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.