படைப்பாளிகள், புத்தக பிரியர்களுக்கு ஓர் இனிய செய்தி! முதல்வரின் அறிவிப்பும் பேச்சும்

படைப்பாளிகள், புத்தக பிரியர்களுக்கு ஓர் இனிய செய்தி! முதல்வரின் அறிவிப்பும் பேச்சும்
படைப்பாளிகள், புத்தக பிரியர்களுக்கு ஓர் இனிய செய்தி! முதல்வரின் அறிவிப்பும் பேச்சும்

தமிழில் வெளிவரும் சிறந்த நூல்களை உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய ஆண்டுதோறும் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும் என சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களாக நடைபெற்று வந்த சர்வதேச புத்தக்க் கண்காட்சியின் நிறைவு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். தமிழ்வழிப் பாடத்திட்டத்தில் பள்ளிக்கல்வி பயின்று, மருத்துவ கல்வியை பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான ஐந்து நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார்.

அதன்படி மருத்துவக் கல்லுரி மாணவர்களுக்கான பன்னாட்டுப் பதிப்பு நூல்கள் - தமிழில்,

1. நடைமுறை உடற்செயலியல்
- University Press

2. பெய்லி & லவ் - இன் - அறுவை சிகிச்சையில் ஒரு சிறு பயிற்சி - Taylor & Francis

3. கிரே - இன் - உடற்கூறியல் - Elsevier

4. கைட்டன் மற்றும் ஹால் மருத்துவ உடற்செயலியல் - Elsevier

5. முதலியார் & மேனன் மகப்பேறியல் - University Press

ஆகிய ஐந்து மருத்துவக் கல்வி நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டன.

மேலும் தமிழ் மொழியில் வெளிவரும் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய, மொழிபெயர்ப்பு மானியமாக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். இந்த சர்வதேச புத்தக காட்சியின் மூலமாக மொத்தம் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கை எழுத்தாகியுள்ளன. அதன்படி தமிழ் மொழியிலிருந்து இந்திய மொழிகளுக்கு 60 நூல்களும், தமிழ் மொழியிலிருந்து உலக மொழிகளுக்கு 90 நூல்களும் மொழிபெயர்ப்பு செய்யப்பட உள்ளன.

இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் வளர்ச்சியிலும், செஸ் ஒலிம்பியாட் மூலமும் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது தமிழ்நாடு. பல ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் தொடரை நடத்திய தமிழ்நாடு, அந்த வரிசையில் சர்வதேச புத்தக காட்சியை நடத்தியுள்ளது.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் இயற்றல் வேண்டும்.
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்!

- என்ற கவிதை வரிகளை மகாகவி பாரதியார் எழுதி 120 ஆண்டுகள் ஆகிவிட்டது. மகாகவியின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சியானது நடைபெற்று வருகிறது.

பதிப்புத்துறை பெரிதாக இல்லாத நேரத்தில் கம்யூனிஸம் மற்றும் அம்பேத்கர் குறித்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர் பெரியார். தமிழ்நாட்டில் தமிழாட்சி நடக்கும் போது இது போன்ற பன்னாட்டு புத்தகக் காட்சிகள் நடப்பது வியப்புக்குரியது அல்ல. இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கவும், உலகெங்கிலும் உள்ள சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது .

கடந்த ஒன்றரை ஆண்டில் அரசு சார்பில் மட்டும் 173 புத்தகங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் இந்த புத்தக காட்சியை நடத்த பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கிறேன். தமிழ் நூல்கள் பிற மொழிகளுக்கு செல்ல வேண்டும், வேறு மொழி நூல்கள் தமிழில் வர வேண்டும். தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய இலக்கியங்களாக மாற வேண்டும் என்றால், உலக அளவில் உள்ள மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார், அவற்றுக்கு இந்த பன்னாட்டு புத்தக கண்காட்சி உதவும்.

பன்னாட்டு புத்தக காட்சி மூலம் தமிழ் மொழியில் இருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கும் 365 புரிந்து ஒப்பந்தம் கை எழுத்தாகி உள்ளது. எப்போது தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறதோ அப்போது நம்முடைய மொழியும் வளம் பெறும், சொற்களும் வலிமை பெறும், புதிய இலக்கியங்கள் மட்டுமல்ல, புதிய சொற்களும் கிடைக்கும். காலம் தோறும் புதிய புதிய சொற்கள் உருவானால் தான் மொழியின் காலமும் நீட்டிக்கும்.

தமிழின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்பிரமணியம் அவர்கள், 'ஆங்கிலத்தின் இலக்கிய வளமே மொழிபெயர்ப்பாளர்களால் தான் ஏற்பட்டது' என்று சொல்லி இருக்கிறார். யாரும் கோரிக்கை வைத்து நாங்கள் இதை செய்யவில்லை இப்படி செய்வதுதான் எங்கள் வாடிக்கை, இதை பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழ் மொழியில் வெளிவரும் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய, மொழிபெயர்ப்பு மானியமாக தமிழக அரசால் 3 கோடி வழங்கப்படும்” என தெரிவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”இந்த மைதானத்தில் நானும் உதயநிதியும் எதிர்எதிர் அணியில் கிரிக்கெட் விளையாடி உள்ளோம். இன்று ஒரே கேப்டன் தலைமையில் ஒரே அணியில் உள்ளோம். கடந்த 100 ஆண்டுகளில் 100 புத்தகங்கள் வரை மட்டுமே வெளி நாட்டிற்கு இங்கிருந்து சென்றுள்ள நிலையில், மூன்று நாட்களில் 90 புத்தகங்கள் மொழி பெயர்ப்பு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதான் திராவிட மாடலின் கனவு, பெருமை” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com