தமிழ்நாடு
சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 3,000 காவலர்கள்
சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 3,000 காவலர்கள்
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 3,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேருரையாற்றுகிறார். இதனையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரைப்படி, இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 3 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னை விமான நிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.