சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி, அந்தி சாய்ந்த நேரத்தில் நடந்தது அந்த படுகொலை.. உணவு டெலிவரி செய்வது போல் இருசக்கரத்தில் வந்த நபர்கள், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை வெட்டவெளியில் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். ஏற்கெனவே வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளன்று, பழிக்குப்பழி தீர்த்தது அந்த கும்பல்.
ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி என அடுத்தடுத்து காவல்துறையின் கைது நடவடிக்கையில் பெரும் கும்பல் சிக்கியது. அடுத்தடுத்த விசாரணையில் திமுக வழக்கறிஞர் அருள், திமுக நிர்வாகி குமரேசனின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகிகள் மலர்கொடி, ஹரிதரன், காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன், பாஜக நிர்வாகி செல்வராஜ் என பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிக்கியது பெரும் அதிர்ச்சி.. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொது செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை பிரபல ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் காதலியான பாஜக நிர்வாகியான பெண் தாதா அஞ்சலை என கைது படலம் நீண்டது. வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், அப்பு, நூர் விஜய், ராஜேஷ், கோபி, குமரன், புதூர் அப்பு என மொத்தம் 28 பேரை கைது செய்தது காவல்துறை.
அவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
ஆற்காடு சுரேஷின் நண்பரான சீசிங் ராஜாவை கடந்த இரண்டு மாதங்களாக தேடி வந்த காவல்துறையினர், அவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29ஆவது நபராக கைது செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, வேளச்சேரியில் முதியவரிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கு தொடர்பாக, அவரை விசாரணைக்காக வேளச்சேரி காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், சீசிங் ராஜா என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் 25 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.