Baby
BabyPT Desk

உசிலம்பட்டி: பிறந்து 28 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு - கொலையா என விசாரணை

உசிலம்பட்டி அருகே பிறந்து 28 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் சிசுக் கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழப்பட்டியைச் சேர்ந்தவர்கள் இந்துரஞ்சித் - லாவண்யா தம்பதியர். விவசாய கூலித் தொழிலாளிகளான இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக சுகப்பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்த குழந்தை என்பதால், 5-வது நாளில் தாய், சேயுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழந்த குழந்தை
உயிரிழந்த குழந்தைPT Desk

இந்நிலையில் இன்று காலை குழந்தைக்கு பால் கொடுத்து, தனது மூத்த மகள் துணையுடன் தூங்க வைத்துவிட்டு விவசாய பணிகளை தாய் லாவண்யா செய்து கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து குழந்தையை வந்து பார்த்தபோது குழந்தை மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்து 28-வது நாளிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமங்கலம் காவல்நிலைய போலீசார் பெண் சிசுக் கொலையாக என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com