ஜூலை 23: மாஞ்சோலை தொழிலாளர்களின் கண்ணீர் வரலாறு.. தாமிரபரணி தடியடி நினைவு நாள்!!
1999, ஜூலை 23... உரிமைக் குரல் எழுப்பிய மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது தாமிரபரணிக் கரையில் நடத்தப்பட்ட தடியடியில், இரண்டு வயதுக் குழந்தை உட்பட 17 உயிர்கள் பலியாயின. இன்றுடன் 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அந்த இரத்தச் சுவடுகளும் ஆறாத வடுவும் மக்களின் மனதில் இன்னும் அணையாமல் எரிகிறது. சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து 1929இல் குத்தகைக்கு பெறப்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட மலைப் பகுதிகள், தொழிலாளர்களின் வியர்வையாலும் இரத்தத்தாலும் செழிப்பான தேயிலைத் தோட்டங்களாக மாறின.
மூன்று, நான்கு தலைமுறைகளாக அங்கே வாழ்ந்த மக்களுக்கு, அந்த மலையே வீடாகவும் தாய்மண்ணாகவும் விளங்கியது.காலம் மாறியது. புலிகள் காப்பகப் பகுதியைப் பாதுகாக்கும் பொருட்டும், குத்தகைக்காலம் நிறைவடைவதைக் காரணம் காட்டியும், நிர்வாகம் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்றியது. தாத்தா வாழ்ந்த வீடு, குழந்தைகள் விளையாடிய தெருக்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தையும் துறந்து, தொழிலாளர்கள் கண்ணீருடன் மலையை விட்டு இறங்கினர். இன்று மாஞ்சோலை வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது.
8000 ஏக்கர் கணக்கில் நிலம் மீண்டும் வனத்துறையின் வசமாகி அடர்ந்த காடாக மாறிக்கொண்டிருக்கிறது. தேயிலை பறித்த கரங்கள் இன்று சமவெளியில் வாழ்வாதாரம் தேடி அலைகின்றன மாஞ்சோலை என்பது வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல... அது ஒரு தலைமுறையின் கண்ணீர் வரலாறு... மனித உரிமைப் பாடம். மனிதர்கள் வெளியேறியிருக்கலாம்... ஆனால், நினைவுகள் வாழும் மண் என்ற உணர்வும், அங்கே வாழ்ந்த மக்களின் காலடிச் சுவடுகளும் மலைக் காற்றில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

