தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2024 - 25 | முக்கிய 25 அம்சங்கள்

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கியமான 25 அறிவிப்புகளைப் பார்க்கலாம்.
வேளாண் நிதிநிலை அறிக்கை
வேளாண் நிதிநிலை அறிக்கைமுகநூல்

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கியமான 25 அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி

1) 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்

2) ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மண்ணின் வளம் காக்க 6 கோடியே 27 லட்சம் ரூபாய் மத்திய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25
தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25புதிய தலைமுறை

3) மானாவாரி நிலங்களில் விவசாயிகள் லாபகரமான பயிர்சாகுபடி செய்ய ஏதுவாக, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் பயிரிட விதைகள் வழங்கப்படும். 3 லட்சம் ஏக்கரில் இத்திட்டத்தை செயல்படுத்த, 36 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

4) கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தேர்வு செய்யப்பட்ட 2,482 கிராம ஊராட்சிகளில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

5) முக்கிய பயறு வகைகள், எண்ணெய் வித்துகளின் பரப்பு விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கென 108 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

பட்டதாரி இளைஞர்கள் வேளாண்சார் தொழில் தொடங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் 

6) பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் விதமாக வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

7) சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும்.

8) பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25 | வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
தமிழக வேளாண் பட்ஜெட் 2024 - 25 | வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

9) மாவிற்கான சிறப்புத்திட்டம் 27 கோடியே 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்

10) வாழைக்கான சிறப்புத்திட்டம் 12 கோடியே 73 லட்சம் ரூபாய் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

மனித விலங்கு மோதலைத் தடுக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு

11) மனித விலங்கு மோதலை தடுக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு 75 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்துத்தரப்படும்.

12) டெல்டா மாவட்டங்களில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணி, 10 கோடி ரூபாய்நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

13) திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு தானியங்களை உலர்த்த நடமாடும் உலர்த்திகள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்படும்.

வேளாண் நிதிநிலை அறிக்கை
வேளாண் நிதிநிலை அறிக்கைமுகநூல்

14) கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலா மதிப்புக்கூட்டுதலுக்கான மையம் 16 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசு நிதியில் ஏற்படுத்தப்படும்.

15) வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் அளித்து மேம்படுத்திட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

3 இடங்களில் வேளாண் கண்காட்சி

16) நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித்திறனை மேம்படுத்த 773 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

17) 3 இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்த 9 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

18) பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 7 மாவட்டஙகளில் 25 வட்டாரங்களில் உள்ள 275 நீர்வடிநிலப்பகுதிகளில் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை வள மேம்பாட்டுப்பணிகள், உற்பத்திப்பணிகள், வாழ்வதாரப்பணிகள் மத்திய மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

19) 2024-25 ல் பயிர்க்கடன் வழங்க 16,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

20) உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு 10,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடற்கரை அருகே சூரியத்தோட்டம்

21) மேலும் தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

22) கன்னியாகுமரியில் கடற்கரை அருகில் சூரியத் தோட்டம் அமைக்கப்படும்.

23) காவிரி டெல்டா பகுதிகளில் தென்மேற்குப்பருவமழை தொடங்கும் முன் 5,338 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களை துர்வாருவதற்கு 110 கோடி ரூபாய் செலவில் 919 பணிகள் மேற்கொள்ளப்படும்.

#BREAKING | கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
#BREAKING | கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

24) பண்ணைக்குட்டைகள், நீர் செறிவூட்டுத்தண்டுகள், கசிவு நீர் குட்டை, செறிவூட்டு கிணறுகள், புதிய குளங்கள், மண்வரப்பு, கல்வரப்பு போன்ற 2 லட்சம் பணிகள் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

25) தருமபுரி, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 110 கிராமங்களில் 110 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வறட்சித்தணிப்புக்கான சிறப்பு உதவித்திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com