மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரே நாளில் 24 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு
சென்னையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை நாள்தோறும் குறிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேலும் புதிதாக 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமாகி 3,591 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், கொரோனா தொற்றுக்கு இன்று அதிகபட்சமாக 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது. எவ்வித இணை நோய்களும் இல்லாமல் 8 பேர் பலியாகியுள்ளனர்.
இதில், சென்னையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் 9 ஆம் தேதி காலை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் உடனடியாக உயிரிழந்துவிட்டார்.
மறுநாளான நேற்று அவரது சோதனை முடிவுகள் வெளியானது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. Cardiogenic Shock / Complete Heart Block / Bronchopneumonia / Pancytopenia / COVID 19 Positive ஆகியவற்றின் தாக்கத்தால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையைச் சேர்ந்த 30 வயது இளைஞரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே உயிரிழந்தார். 9 ஆம் தேதி தனியார் மையத்தில் கொரோனா சோதனை எடுத்திருந்தார். அதன் முடிவுகள் நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண்ணும் கொரோனா காரணமாக பலியாகியுள்ளார்.