வாட்ஸ்அப் வதந்தியால் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம்: 23 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி, உறவினர்களான வெங்கடேசன், சந்திரசேகரன் உள்பட 4 பேருடன் காரில் திருவண்ணாமலைக்குச் சென்றுள்ளார். அத்திமூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு, தம்புகொட்டாபாறை வழியாகச் சென்றபோது, விலாசம் கேட்பதற்காக ஓட்டுநர் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த சிறுவர்களுக்கு ஆசையாக சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார் ருக்மணி. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், அவர் குழந்தைகளைக் கடத்துவதற்காக வந்திருக்கிறார் என சந்தேகமடைந்து, அவரின் காரை சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர். என்ன நடக்கிறது ? எதற்காக தாக்கப்படுகிறோம் ? என்பதை அறியாத ருக்மணியின் உறவினர்கள், கார் மூலம் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
ஆனால் விடாமல் துரத்திச் சென்ற கிராம மக்கள், காரை தடுத்து நிறுத்தி, அதிலிருந்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த காரையும் அவர்கள் கடுமையாக சேதப்படுத்தினர். கீழே விழுந்தவரை மூதாட்டி என்றும் பாராமல் கடுமையாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ருக்மணி உயிரிழந்தார். தகவலறிந்து திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் பொன்னி மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளை கடத்துவதற்காக சிலர் ஊடுருவி இருப்பதாக வாட்ஸ் ஆப்பில் வெளியான தகவலால் சந்தேகமடைந்த கிராம மக்கள் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கொலைச்சம்பவம் தொடர்பாக தம்புகொட்டான்பாறை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த சந்திரசேகரன், மோகன்குமார், வெங்கடேசன், கார் ஓட்டுநர் கஜேந்திரன் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அத்திமூர், தம்புகொட்டன்பாறை, கலையம் கிராமங்களை சேர்ந்த 23 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.