தங்கம் முதல் கார்கள் வரை.. சேலம் இளங்கோவன் இடங்களில் கண்டறியப்பட்டவற்றின் விவரம்!

தங்கம் முதல் கார்கள் வரை.. சேலம் இளங்கோவன் இடங்களில் கண்டறியப்பட்டவற்றின் விவரம்!
தங்கம் முதல் கார்கள் வரை.. சேலம் இளங்கோவன் இடங்களில் கண்டறியப்பட்டவற்றின் விவரம்!

சேலத்தில் அதிமுக நிர்வாகியும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவருமான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்திவரும் சோதனையில் ரூ .29.77 லட்சம் , 10 சொகுசு கார்கள் , 2 சொகுசு பேருந்துகள் , 2650 சவரன் தங்க நகைகள் , 282 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி வைப்புத்தொகை ரூ .68 லட்சம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது சேலத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூட்டுறவு வங்கி தலைவராக உள்ள இளங்கோவன் கடந்த 2014 முதல் 2020-ஆம் ஆண்டு இடைவெளியில் வருமானத்துக்கு அதிகமாக 131 சதவிகிதம் சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது வருமானத்தை விட இளங்கோவன் 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால் அதிகாரிகள் காத்திருந்தனர். பின்னர் இளங்கோவன் பிற்பகலில் வந்து வீட்டை திறந்ததால் 6 மணி நேரத்திற்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். அப்போது அதிமுகவினர் திரண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும், சேலத்தில் 17 இடங்களிலும், திருச்சியில் 4 இடங்களிலும், நாமக்கல், சென்னையில் தலா 2 இடங்களிலும், கரூரில் ஒரு இடத்திலும் சோதனை நீடிக்கிறது. திருச்சி மாவட்டம் முசிறியில் இளங்கோவனின் மகன் பிரவீன்குமார் துணைத் தலைவராக உள்ள கல்வி நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் மற்றும் சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் துணைத்தலைவரும் ஆர்.இளங்கோவனின் மகன் இ.பிரவீன்குமார் ஆகியோர்கள் அவர்களுடைய பெயரிலும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் ஆர்.இளங்கோவன் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக அவர் மீது கடந்த 21.10.2021 ம் தேதியன்று சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற எண் .17 / AC / 2021 uls 13 ( 2 ) r / w 13 ( 1 ) ( e ) } of PC Act 1988 13 ( 2 ) r / w 13 ( 1 ) ( b ) of the PC Act 1988 as amended in 2018 , 109 IPC r / w 13 ( 2 ) r / w 13 ( 1 ) ( e ) PC Act 1988 and 12 r / w 13 ( 2 ) r / w 13 ( 1 ) ( b ) of PC Act 1988 as amended in 2018- ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது .

மேற்படி வழக்கு தொடர்பாக ஆர்.இளங்கோவன் மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுனங்கள் , நகைக் கடைகள் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் மற்றும் சுவாமி அய்யப்பன் அறக்கட்டளை என்ற பெயரில் முசிறியில் செயல்பட்டுவரும் முசிறி இன்ஸ்டியூட்ஸ் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் உட்பட, சென்னையில் 3 இடங்கள், கோயம்புத்தூர் - 1 இடம் , நாமக்கல் - 3 இடங்கள் , முசிறி ( திருச்சி ) - 6 இடங்கள் மற்றும் சேலம் - 23 இடங்கள் ஆக மொத்தம் 36 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் இன்று 22.10.2021 ஆம் தேதியன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .

இந்த சோதனையில் பணம் ரூ.29.77 லட்சம் ரொக்கம் , 10 - சொகுசு கார்கள் , 2 - வால்வோ சொகுசு பேருந்துகள் , 3 கணினி ஹார்டு டிஸ்க்குகள் , சொத்துக்கள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் , 21 : 2 கிலோ கிராம் ( 2650 சவரன் ) தங்க நகைகள் , 282 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் வங்கி வைப்புத்தொகை ரூ .68 லட்சம் ஆகியவை கண்டறியப்பட்டு , வழக்கிற்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன . சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகியுள்ள இளங்கோவன், தற்போது தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும் அதிமுகவில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராகவும் இளங்கோவன் இருந்து வருகிறார். இளங்கோவனின் சொத்து மதிப்பு கடந்த 2014ஆம் ஆண்டில் சுமார் 30 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ஐந்தரை கோடி ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சட்டவிரோதமாக கல்வி நிலையங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி குவித்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com