நட்சத்திரத் தொகுதி | திருச்சி மேற்கு - 2026இல் வெற்றி பெறுவாரா கே.என்.நேரு?
திருச்சி மேற்குத் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு 2021 தேர்தலில் 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களைத் திருச்சிக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால், போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகள் இன்னும் நீடிக்கின்றன.
லால்குடி, திருச்சி 2, திருச்சி மேற்கு என்று பல தொகுதிகளில் களமாடியிருந்தாலும், திருச்சி என்றாலே நினைவுக்கு வருபவர் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி மேற்குத் தொகுதியில் 2016இல் 28,415 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நேரு, அடுத்து வந்த 2021 தேர்தலில் 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அமைச்சரானார். மத்திய பேருந்து நிலையம், வணிகவளாகங்கள், அரசு மருத்துவமனை எனத் திருச்சியின் இதயப்பகுதியாக விளங்கும் தொகுதி திருச்சி மேற்கு. 2 லட்சத்து 35,903 வாக்காளர்களைக் கொண்ட தொகுதி இது. கடந்த 5 ஆண்டுகளில் தனது தொகுதிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த திருச்சி நகருக்கும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார் நேரு.
ஒருங்கிணைந்த பேருந்து முனையம், காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலங்கள், பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் எனப் பல பணிகளைச் செய்திருக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதற்கட்டப் பணிகளும் இத்தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனாலும், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட நீண்டகாலக் கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக கூறுகிறார்கள் தொகுதி மக்கள்.
கே.என்.நேருவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று என்று திமுகவினர் கூற, 9 தேர்தல்களில் 4 தொகுதிகளில் தோற்றவர்தான் நேரு என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். இந்த முறை அதிமுக மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போன்றவையும் திமுகவின் கோட்டையைத் தகர்க்கும் நோக்கத்தோடு களமிறங்கியிருப்பது, திருச்சி மேற்குத் தொகுதியின் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது.

