“மண்டியிடாமல் மானத்தோடு..” திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகல்!
திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி விலகியது. கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணமாக திமுக தரப்பில் பேச்சுவார்த்தை இல்லாமை மற்றும் கோரிக்கைகளை ஏற்காமை குறிப்பிடப்பட்டது. தலைவர் வேல்முருகன், மானத்தோடு அரசியல் செய்வேன் என தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனுனான தொகுதிப் பங்கீடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் 23 கட்சிகளுடன் கூட்டணி வைத்து திமுக களம்காணும் நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு அவர்களுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
தொகுதிப் பங்கீட்டு விசயத்தில் ஒரு பக்கம் விசிக வேதனை தெரிவித்திருக்கும் நிலையில், மறுபக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடனான பேச்சுவார்த்தை இறுதிமுடிவை எட்டாமல் இருந்துவருகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியாக இருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூடுதல் தொகுதி கேட்டதோடு, அடுத்த 24 மணி நேரத்தில் திமுக தரப்பிடமிருந்து எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்திருந்தது.
இந்தசூழலில் தான் தற்போது திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
மண்டியிடாமல் மானத்தோடு..
கூட்டணி குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தவாக தலைவர் வேல்முருகன், திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் தவாகவிற்கு 1 இடத்தை ஒதுக்குவதாக தெரிவித்தார்கள். ஆனால் இடங்கள்கூட பிரச்னையில்லை. பல தரப்பினரின் கண்ணீரை துடைக்கும் வகையில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம்.
ஆனால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் கோரிக்கைகள் ஏதும் வைக்காமல் தொகுதி உடன்பாட்டை எட்டும்போது, நீங்கள் மட்டும் எப்படி, இப்படி கேட்கலாம் என்ற தொனிதான் அவர்களிடம் இருந்தது. எங்களது கோரிக்கைகளை திமுக அரசு பொருட்படுத்தவில்லை. கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றூம் உறுப்பினர்களின் ஒருமித்த முடிவாக திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுகிறது” என தெரிவித்தார்.
மேலும், “திமுகவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அதிகாரிகளின் ஆட்சிதான் நடந்து வருகிறது. ஆட்சி மாறியுள்ளது, ஆனால் காட்சி மாறவில்லை. அந்த அதிகாரிகளின் பேச்சை கேட்டுக்கொண்டு திமுக தலைமை தமிழக வாழ்வுரிமைக் கட்சியை புறக்கணித்துள்ளது. சமூக நீதிக்கு எதிரான சக்திகளை உடன் வைத்துக்கொண்டு எப்படி திமுக சமூகநீதி அரசாக நடைபோட முடியும். மண்டியிடாமல் மானத்தோடு செயல்படுவேன்.
அதேபோல நாட்டை மதத்தின் பெயரால் பிளவுபடுத்துகிற NDA தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது. எந்த கட்சி எங்களுடைய கோரிக்கையை ஏற்கிறதோ அவர்களுடன் கூட்டணி வைப்போம்” என தெரிவித்தார்.

