புத்தம் புதிய உற்சாகத்துடன் பிறந்தது 2017-ஆம் ஆண்டு... பொதுமக்கள் கொண்டாட்டம்
2016-ஆம் ஆண்டு கடந்து போன நிலையில், புத்தம் புதிய உற்சாகத்துடன், 2017-ஆம் ஆண்டு பிறப்பெடுத்திருக்கிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், வழக்கமான உற்சாகத்துடன் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நள்ளிரவில், கடற்கரையோரங்கள், முக்கிய இடங்களில் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், சிறார்கள், பெரியவர்கள், ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டை வரவேற்பதற்காக சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள், கேக் உள்ளிட்ட இனிப்புகள் வழங்கி, உற்சாக முழக்கமிட்டு மகிச்சியை வெளிப்படுத்தினர். ஆடல் பாடல்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் கை குலுக்கியும், கட்டித் தழுவியும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இளைஞர்கள் மட்டுமல்லாமல் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
மெரினா போன்ற பொது இடங்கள் தவிர, தனியார் நட்சத்திர விடுதி மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
இதற்காக ஆடல் பாடல் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ப்பட்டிருந்தன. கொண்டாட்ட மனநிலை இருந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர்.
கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க சென்னையில் உள்ள சாந்தோம் மற்றும் பெசன்ட்நகர் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களில் சிறப்பு வழிபாடு,கூட்டு திருப்பலிகள் நடைபெற்றன. அதில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மக்கள் புதிய ஆண்டு சிறப்பாக அமைய பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சென்ற ஆண்டுகளைப் போல வெள்ளம், வர்தா புயல் என இல்லாமல் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகும் புத்தாண்டாக 2017 அமைய வேண்டும் என்பதே அனைவரும் கருத்தாக உள்ளது.