முருகன் கோயிலில் 20 கிலோ வெள்ளி, பணம் கொள்ளை: போலீசார் விசாரணை
ஆவடி அருகே முருகன் கோயில் பூட்டை உடைத்து 20 கிலோ வெள்ளி மற்றும் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த வீராபுரத்தில் உள்ளது தண்டாயுதபாணி முருகன் கோவில். 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆவடி சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வர். இந்நிலையில், வழக்கம்போல் இரவு பூஜை முடிந்த பின்னர் கோவில் அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து இன்று காலை மீண்டும் பூஜைக்காக அர்ச்சகர் கோவிலை திறக்க வந்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அருகே உள்ள ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சுமார் 20 கிலோ மதிப்புள்ள முருகனின் வெள்ளிக் கவசம் மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் 2 மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து கவசத்தைப் எடுப்பதும், உண்டியலில் இருந்து பணத்தை திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்து காவல் துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்

