வைகை ஆற்றில் அடுத்தடுத்து கரை ஒதுங்கும் சடலங்கள் - தொடர்கதையாகும் உயிரிழப்புகள்!

வைகை ஆற்றில் அடுத்தடுத்து கரை ஒதுங்கும் சடலங்கள் - தொடர்கதையாகும் உயிரிழப்புகள்!
வைகை ஆற்றில் அடுத்தடுத்து கரை ஒதுங்கும் சடலங்கள் - தொடர்கதையாகும் உயிரிழப்புகள்!

மதுரையில் வைகையாற்றில் குளிக்கச்சென்று மாயமான இரண்டு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மதுரை வைகையாற்றில் நீரின் வேகமானது அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் மதுரை வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கைகளை மீறி பொதுமக்கள் குளிக்க செல்வதால், ஆற்று நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை துவரிமான் முத்தையா சுவாமி கோயிலுக்கு உறவினர்களுடன் வந்த மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த 23 வயதான தனசேகரன், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான கண்ணன் ஆகிய இருவரும் துவரிமான்-பரவை வைகை ஆற்று பாலத்தின் கீழே குளித்து கொண்டிருந்தபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இவர்கள் இருவரையும் இரண்டாவது நாளாக தீயணைப்புத்துறையினர் தேடிவந்த நிலையில், மாலையில் இருவரையும் கோச்சடை அருகில் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டனர். இதனிடையே இன்று காலை மதுரை வண்டியூர் அருகே தேனூர் மண்டபத்தின் அருகிலும், செல்லூர் பகுதியில் உள்ள வைகை ஆற்று பகுதியிலும் மிதந்துகொண்டிருந்த அடையாளம் தெரியாத இருவரின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதேபோல் கடந்த 9 ஆம் தேதி சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றில் குளித்த திருமங்கலம் கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் வினோத்குமார் (25), அன்பரசன் (24) ஆகிய இருவரும் ஆற்றில் உயிரிழந்தனர். மேலும் இருவரின் உடலை எடுக்கும்போது அடையாளம் தெரியாத மற்றொரு நபரின் உடலும் மீட்கப்பட்டது.

இதேபோன்று கடந்த வாரம் வாடிப்பட்டி, சோழவந்தான் ஆகிய பகுதியில் அடையாளம் தெரியாத இருவரின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மதுரை வைகை ஆற்றில் கடந்த 10 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், 5 பேர் உடல் அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வைகை ஆற்று கரையோரங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com