காவலர் பணிக்காக போலி விளையாட்டுச் சான்றிதழ் - 5 பேர் கைது
இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர போலி விளையாட்டுச் சான்றிதழ் கொடுத்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்றவர்களில் 5 பேர், போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், போலிச் சான்றிதழ் வழங்கிய சென்னையைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான் மற்றும் அவரின் முகவராக செயல்பட்ட ராஜீவ்காந்தி ஆகியோரை கைது செய்தனர். சீமானிடம் வாங்கிய போலிச் சான்றிதழைப் பயன்படுத்தி திருச்சி ஆயுதப்படையில் சேர்ந்து பணியாற்றி வந்த மனிராஜனும் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சீமானிடம் பெற்ற போலிச் சான்றிதழை இரண்டாம் நிலை காவலர் பணிக்காக சமர்பித்த, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துமணி, ராஜசேகரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தலா 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து போலிச் சான்றிதழை வாங்கியுள்ளனர். இதுதவிர, இந்தோ - திபெத் எல்லைக் காவல்படைப் பிரிவில் சேர போலிச் சான்றிதழ் சமர்பித்த தவமுருகன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.