
சேலத்தில் தாத்தாவுடன் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற பேரன் தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியயை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்களில் தமிழரசு என்ற 2 வயது குழந்தையும் ஒன்று. இந்த குழந்தையின் தாத்தா பழனிகவுண்டர், அதே பகுதியில் உள்ள கோட்டைமேடு என்ற இடத்தில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது கயிறு திரிக்கும் மில்லில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் இன்று இவர் வேலைக்கு போகும்போது பேரன் தமிழரசு அழுததால் தன்னுடன் அழைத்து சென்று ஓரமாக விட்டுவிட்டு, கயிறு திரிக்கும் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது கயிறு திரிக்க பயன்படுத்தும் நார்களை ஊரவைக்கும் தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. கயிறு திரிக்கும் மெஷின்களின் சத்தத்தால் குழந்தை தொட்டிக்குள் விழுந்தது பழனிகவுண்டருக்கு தெரியவில்லை. வெகுநேரம் கழித்து குழந்தையை காணவில்லை என பல இடங்களில் தேடியுள்ளனர். சந்தேகமடைந்து தண்ணீர் தொட்டிக்குள் தேடியபோது குழந்தை தொட்டிக்குள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குழந்தையை மீட்டு தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
அங்கே முதலுதவி சிகிச்சைகள் முடிந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாக கூறக்கூடாது என்று நார்மில் உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குழந்தையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.