13 இடங்களில் குண்டுவைத்து வெடிப்பு.. 30 ஆண்டு தலைமறைவிற்கு பின் 2 பேர் கைது! பகீர் பின்னணி!
முன்னாள் துணை பிரதமர் சென்ற யாத்திரை, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வெடிகுண்டு வைத்து கொலை செய்த வழக்கு, சென்னை காவல் ஆணையர் அலுவலகம், இந்து முன்னணி அலுவலகம் என நீளும் வெடிகுண்டு சம்பவத்தில் தேடப்பட்டுவந்தவர்களை 30 ஆண்டுக்கு பிறகு கைதுசெய்துள்ளது காவல்துறை.
30 ஆண்டுகளுக்கு பிறகு கைது..
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இரண்டு பயங்கரவாதிகளை தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி ஆகியோர் என்பது தெரிய வந்தது.
பகீர் குற்றப் பிண்ணனி..
அபூபக்கர் சித்திக்
இதில் கைது செய்யப்பட்ட அபூபக்கர் சித்திக், கடந்த 1995 ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தின் மீது குண்டு வீசியதும், இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நாகூரில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் தங்கபாண்டி என்பவர் வீட்டுக்கு பார்சல் வெடிகுண்டு அனுப்பியதும், அதனை திறந்து பார்த்த தங்கபாண்டியின் மனைவி தங்கம்மாள் என்பவர் வெடித்து சிதறி உயிரிழந்த வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்ததுள்ளது.
மேலும், 1999 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் உட்பட சென்னை திருச்சி கோவை மற்றும் கேரளா என ஏழு இடங்களில் வெடிகுண்டு வைத்த நிலையில் அதில் இரண்டு மட்டுமே வெடித்து ஒரு சிலர் காயம் அடைந்த வழக்கும் உள்ளது.
இதே போல 2011ஆம் ஆண்டு முன்னாள் துணை பிரதமர் எல்.கே அத்வானி மதுரையில் ரத யாத்திரை சென்றபோதும் வெடிகுண்டு வைத்த வழக்கும், 2012ஆம் ஆண்டு வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கும், பெங்களூருவில் பாஜக அலுவலகம் அருகே குண்டு வீசிய வழக்கும் என பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதும் போலீசார் கண்டுபிடித்தனர்.
முகமது அலி
இதே போல மற்றொரு நபரான முகமது அலி, 1999ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் கேரளாவில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்போது கைது செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் பல்வேறு மொழிகளை பேசுவதால் பல மாநிலங்களுக்குச் சென்று தலைமறைவாக இருந்து வந்ததும், அதே போல பெயர்கள் மற்றும் அடையாளங்களை மாற்றிக்கொண்டு சுற்றி திரிந்ததால் போலீசாருக்கு கைது செய்வதில் சிரமம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளதாக ATS போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்கள் தடை செய்யப்பட்ட எந்தெந்த அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து வந்ததுள்ளனர்? தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் என்னென்ன சதித்திட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.