ஹோட்டலில் தங்கியிருந்த காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த 2 போலீசார் பணிநீக்கம்
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த காதல் ஜோடியிடம் பணம் பறித்த வழக்கில் பெரியகடை காவல் நிலைய போலீசார் இருவரை பணி நீக்கம் செய்து காவல்
துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த
புதன்கிழமை கடலூரைச் சேர்ந்த காதல் ஜோடி, புதுச்சேரியைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்துள்ளனர். அவர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றிப்
பார்த்துவிட்டு, அன்று இரவு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது ரோந்து பணியில் இருந்த பெரியகடை காவல்நிலைய
போலீசார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் காதல் ஜோடி தங்கி இருந்த விடுதிக்குச் சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது காதல்
ஜோடி அறைக்குச் சென்ற காவலர்கள் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், காதல் ஜோடியிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி காவல்துறை தலைமையகத்திற்கு
புகார் சென்றதை அடுத்து, உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது. அதில், பணம் பறிப்பு சம்பவம் உண்மை என தெரியவந்ததை அடுத்து, காவலர்கள்
சதீஷ்குமார், சுரேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பெரியகடை காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இந்த வழக்கு குறித்தும்
விசாரணை நடத்தினார். இதனையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான உயர்மட்ட போலீஸ் குழு இதுபற்றி விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பணம் பறித்த காவலர் சதீஷ்குமார், ரிசர்வ் பட்டாலின் காவலர் சுரேஷ் ஆகியோர் மீது அவர்கள் பணியாற்றிய அதே பெரியகடை
காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தது மட்டுமல்லாமல் இருவரையும் பணியில் இருந்து நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.