தமிழ்நாடு| நாய்க்கடியால் ஒரே மாதத்தில் 2 பேர் மரணம்.. ஒரே ஆண்டில் 3.70 லட்சம் பேர் பாதிப்பு!
தமிழ்நாட்டில் நாய்க்கடி பாதிப்பு பெரும்அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டுபேர் நாய்க்கடியால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், இந்த ஆண்டு ரேபிஸ் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
3.70 லட்சம் பேர் பாதிப்பு..
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெரு நாய்கள் மற்றும் முறையாக தடுப்பூசி போடப்படாத வளர்ப்பு நாய்கள் கடிப்பதுதான் இந்த பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
ரேபிஸ் தடுப்பூசி போடாத நாய்கள் கடிக்கும்போது, மனிதர்களுக்கும் அந்தத் தொற்று பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. ரேபிஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 336 அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.