கள்ளக்குறிச்சி: இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றுமாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் மூரார்பாளையத்தில் இருந்து அழகாபுரம் நோக்கி தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சங்கருக்கு பின்னால் முனீஸ் என்பவர் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றுள்ளார். இதில் சங்கர் வாகனம் மீது அது மோதப்போயுள்ளது. இதனால் வாகனங்கள் மோதாமல் இருக்க, முனீஸ் தன் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது முனீஸ் ஓட்டிவந்த வாகனமானது, எதிரே வந்த அமாவாசை என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அமாவாசை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காயமடைந்த முனீஸ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் சிக்கிய இரண்டு இருசக்கர வாகனங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கள்ளக்குறிச்சி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.