விருதுநகர்: பஞ்சாலை ஊழியர்களுடன் வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து-இருவர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே பஞ்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பனையூர், திருச்சுழி சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து தனியார் பஞ்சாலைக்கு மினி பேருந்து மூலமாக ஊழியர்கள் ஏற்றி செல்லப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று 22 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது பனையூர் திருச்சுழிக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது நிலைதடுமாறு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் பூசையா, ஸ்ரீகாந்த் ஆகியோர் என்பது தெரியவந்தது.