பணமில்லாமல் மலையில் தஞ்சமடைந்த ரஷ்ய தம்பதி: ட்ரோன் மூலம் கண்டுபிடித்து மீட்ட போலீசார்
திருவண்ணாமலை கிரிவல மலையின் மீது தஞ்சம் புகுந்த வெளிநாட்டு தம்பதியை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.
கொரோனா பிரச்னை தொடங்குவதற்கு முன் திருவண்ணாமலைக்கு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விக்டர், அவர் மனைவி டாட்டியானா ஆகியோர் வந்துள்ளனர். தினமும் ரூ.300 வாடகை கொடுத்து ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் உரிய நேரத்தில் சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாமல் இங்கேயே தங்கி இருப்பதால் அவர்கள் கையில் வைத்திருந்த பணம் தீர்ந்துள்ளது. இதனால் சாப்பிடக் கூட வழி இல்லாத அந்த தம்பதி, தங்கி இருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு திருவண்ணாமலை கிரிவல மலையின் மீது தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கு தியானம் செய்துகொண்டு இருந்த தம்பதியை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.
உடனடியாக மலைமீது ஏறிய போலீசார் தம்பதியை மீட்டுள்ளனர். மேலும் அவர்களது நிலை அறிந்த போலீசார் அவர்கள் ஏற்கெனவே தங்கி இருந்த வீட்டில் வாடகை இல்லாமல் தங்கவும், தொண்டு நிறுவனம் மூலம் உணவளிக்க ஏற்பாடும் செய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, வெளிநாட்டவர்கள் திருவண்ணாமலையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ வசதியும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.