சிறுமியை தூக்கி வீசிய மாடு... எப்படி இருக்கிறார் சிறுமி? மாட்டின் உரிமையாளர் மீது பாய்ந்த வழக்குகள்!

“மாடுகள் தொடர்ந்து இவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்தால் அவற்றை கையகப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபடும்” - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
சிறுமியை தூக்கி வீசிய மாடு
சிறுமியை தூக்கி வீசிய மாடு புதிய தலைமுறை

சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி, இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாய் மற்றும் சகோதரனுடன் நடந்து சென்ற ஒரு பள்ளிச்சிறுமியை, பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. மாடுகளின் கால்களுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிறுமியை, இரண்டு மாடுகள் கடுமையாக தாக்கியது. தொடர்ந்து அருகில் இருந்த ஒருவர் தடியால் மாட்டை விரட்டி சிறுமியை காப்பாற்றினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பசுமாடு பள்ளி குழந்தையை வெறியோடு தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரையும் திகிலுரச் செய்தது.

பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தலையில் நான்கு தையல் போடப்பட்டிருக்கிறது. குழந்தைக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் மாட்டின் உரிமையாளர்  விவேக் மீது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல், கவனக்குறைவாக இருப்பது என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் குழந்தையைப்போல இனி வேறு எந்தக் குழந்தையும் பாதிக்காதவகையில் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஜாபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன், “சென்னை பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து சென்று பெரம்பூர் மற்றும் புதுப்பேட்டை பகுதிகளில் வைக்கிறோம். ஒரு மாட்டிற்கு 2,000 ரூபாய் என அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், அதன் உரிமையாளர்கள் அந்த அபராத தொகையை செலுத்திவிட்டு, சம்பவத்தை கருத்தில் கொள்ளாமல் மீண்டும் அவற்றை தெருக்களில் சுற்றவிடுகின்றனர்.

நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க சில விதிமுறைகள் உள்ளன. 36 அடி தனி இடத்தில்தான் மாடுகளை வளர்க்க வேண்டும். சென்னையின் முக்கிய இடங்களில் இவ்வாறு மாடுகள் சுற்றித்திரிவதால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. நேற்று குழந்தையை மாடு தாக்கிய விவகாரத்தில் அந்த மாட்டை பிடித்து கண்காணிப்பில் வைத்துள்ளோம். மேற்கொண்டு இந்த நடவடிக்கை கடுமைப்படுத்தப்படும். தேவைப்பட்டால் இது குறித்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

அதுவரை உரிமையாளர்கள் மாடுகளை கிராமப்புற பண்ணைகளில் வைத்து பராமரிக்க வேண்டும். மாடுகள் தொடர்ந்து இவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்தால் அவற்றை கையகப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபடும். எனவே மக்கள் நலன் கருதி மாட்டின் உரிமையாளர்கள் இனி இதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையும் அரசு சார்பில் கண்காணித்து வருகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com