சேலம்: நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து - 2 கட்டடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு
செய்தியாளர்: பாலகிருஷ்ணன்
சேலம் மாவட்டம் மேட்டூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை கோயமுத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி திடீரென பழுதாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக, தருமபுரி மாவட்டம் அரக்காஸ் நெல்லி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) மற்றும் தருமபுரி மாவட்டம் வெள்ள வாழை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் வந்த வாகனம், மேட்டூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் உயிரிழந்த நிலையில், உடன் வந்த சிவகுமாரை அங்கிருந்தோர் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.