அரியலூர்: தம்பியை காப்பாற்ற சென்ற அக்காவும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூர்: தம்பியை காப்பாற்ற சென்ற அக்காவும் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அரியலூர்: தம்பியை காப்பாற்ற சென்ற அக்காவும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த குமார் - ஐஸ்வர்யா ஆகியோரது மகள் பிருந்தா(10), மகன் கிரிதரன் (8). இவர்கள் 2 பேரும் செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை அக்காவும் தம்பியும் வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஏற்கெனவே ஆழமாக வெட்டப்பட்டு இருந்த பள்ளத்தில் வழுக்கி சிறுவன் கிரிதரன் மூழ்கி உள்ளான். இதனைக் கண்ட பிருந்தா தம்பியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி உள்ளனர்.

இதனை அவ்வழியே சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் பார்த்து விட்டார். அவர் பேருந்தை நிறுத்தி கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 2 பேரையும் குளத்தில் இருந்து மீட்டு பொன் பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்து செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

செந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர்களும் மருத்துவ ஊழியர்களும் நீண்ட நேரம் போராடியும் சிறுவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.இதனால் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com