சென்னையில் செல்போன் பறித்தே இரண்டு சொந்த வீடுகள் வாங்கிய பாடகர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை தியாகராய நகர், அசோக்நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தவர்களை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது திருட்டுப் போன செல்போன் ஒன்றின் ஐஇஎம்ஐ நம்பரை வைத்து அதைப் பயன்படுத்தியவரை காவல்துறையினர் பிடித்தனர். அவர் தியாகராய நகரில் உள்ள சத்யா பஜாரில் செல்போனை வாங்கியதாக கூறியிருக்கிறார். குறிப்பிட்ட கடையின் உரிமையாளரான ரஷீத் அகமது என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது நண்பர் அசார் அலி திருட்டு செல்போனை கொடுத்ததாக அவர் கூறியிருக்கிறார். இதனையடுத்து மயிலாப்பூரில் வைத்து அசார் அலியை காவல்துறையினர் கைது செய்தனர். ரஷீத் அகமதுவும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அசார் அலியின் கூட்டாளி விக்கியை காவலர்கள் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அசார் அலி மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தியாகராய நகர் சத்யா பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த அவர் கூடவே பார், கிளப் உள்ளிட்ட இடங்களில் பாடகராகவும் இருந்துள்ளார். திருட்டு செல்போன்களை வாங்கி விற்று காவல்துறையிடம் மாட்டிக் கொண்டதால் அவரது கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே வருமானத்திற்காக முழுநேர பாடகராக மாறினார் அசார் அலி. ஆனால் அதில் கிடைத்த வருவாய் அவருக்கு போதவில்லை.
முன்பே திருட்டு செல்போன் வாங்கி விற்ற அனுபவம் இருந்ததால், விக்கி என்பவரை துணைக்கு சேர்த்துக்கொண்டு செல்போன் பறிக்கத் தொடங்கியுள்ளார் அசார் அலி. திருட்டு போன்களை ரஷீத் அகமதுவிடமும் பர்மா பஜாரில் சில கடைகளிலும் விற்றுள்ளார். அதில் நல்ல லாபம் கிடைக்கவே, அதை வைத்து மடிப்பாக்கம் மற்றும் கண்ணமாப்பேட்டையில் வீடு வாங்கியிருக்கிறார்.
இதுவரை 50 பேரிடம் செல்போன் பறித்ததாக அசார் அலி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.