‘காரில் ஒரு நம்பர், ஆவணத்தில் ஒரு நம்பர்’ - விசாரணையில் சிக்கிய பண மோசடி ஆசாமி
ரூ.4 லட்சம் பண மோசடி மற்றும் காரில் நம்பர் பிளேட்டை மாற்றிய புகாரில் ஒரு பெண் அரசு அதிகாரி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த கணேஷன் என்பவர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னிடம் கொருக்குப்பேட்டையை சேர்ந்த குணசேகரன் என்பவர் ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று தலைமை செயலகம் அருகே கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் கார் ஒன்றை மடக்கி ஆவணங்களை சோதனை செய்தனர்.
அப்போது கார் நம்பர் பிளேட்டில் இருந்த நம்பரும், வாகன ஆவணத்தில் இருந்த நம்பரும் மாறி இருந்தது. உடனடியாக காரை ஓட்டி வந்த கொருக்குப்பேட்டை கண்ணன் தெருவை சேர்ந்த குணசேகரன்(35) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குணசேகரன் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து புஷ்பலதா என்பவருடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. புஷ்பலதா தலைமை செயலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் பதிவு எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். காரின் உரிமையாளரான புஷ்பலதா TN05 BQ 6622 என்ற எண்ணில் காரை வாங்கி TN 05 BG 6622 என நம்பரை மாற்றி ஓட்டி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மோசடி வழக்கில் குணசேகரனையும் கார் நெம்பர் பிளேட் மாற்றிய விவகாரத்தில் அரசு அதிகாரி புஷ்பலதாவையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.