குடிநீர் பள்ளத்தில் விழுந்து குழந்தை உயிரிழப்பு - காஞ்சிபுரம் அருகே சோகம்
குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பியிருந்த மழைநீரில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பனையூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியின் தெருக்களில் 3 முதல் 5 அடி ஆழம் வரை பள்ளம் எடுத்து, அதில் மக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெய்த மழையால் தண்ணீர் எடுக்கும் பள்ளத்தில் நீர் நிறைந்திருந்தது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை சஞ்சீவினா தவறி விழுந்தது. காப்பாற்ற யாரும் இல்லாததால் அந்த குழந்தை பரிதாபமாய் உயிரிழந்தது.
இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது குழந்தை நீரில் மூழ்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தேவையை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்து கொடுத்திருந்தால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.