யூ டியூப் வீடியோ பார்த்து ஏடிஎம் கொள்ளை முயற்சி - 2 மாணவர்கள் கைது
யூ டியூப் வீடியோ பார்த்து வங்கி ஏடிஎம்யை கொள்ளை அடிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர் காவல் துறையினரிடம் சிக்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை கரசங்கால் பகுதியில் அமைந்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம். இந்த ஏடிஎம்மில் இரண்டு வாலிபர்கள் கதவினை மூடி விட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்தபோது அதிலுள்ள சிக்னல் மூலம் மும்பை தலைமை அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து மும்பை அலுவலகத்தில் இருந்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ஓட்டேரி மற்றும் மணிமங்கலம் காவல்துறை விரைந்து வந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த இறையன்பு மற்றும் யோகேஷ் என்பதும் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் யூடியூப் சேனலில் ஏடிஎம் செண்டரில் கொள்ளை அடிப்பது குறித்த தகவல் வீடியோவை பார்த்து முயற்சித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏடிஎம்களில் கொள்ளையடிக்க இணையதளத்தை பார்த்து கற்றுக் கொண்டதாக அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது போன்று ஏதேனும் வங்கி கிளைகளில் முயற்சி செய்து உள்ளனரா என மணிமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.