தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த தந்தை, மகன் கைது : 82 பவுன் நகை பறிமுதல்
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் மதிப்பிலான 82 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் ஸ்டேஷன் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் தளி ரயில்வே கேட் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், திருமலட்டி கிராமத்தை சேர்ந்த ராஜூ(23), மற்றும் அவரது தந்தை பிரகாஷ்(48), என்பதும் இவர்கள் ஓசூர் முனீஸ்வர் நகர், அலசநத்தம் ரோடு, குறிஞ்சி நகர், காரப்பள்ளி, அபிராமி கார்டன், ராயக்கோட்டை அடுத்த ஒடையாண்டஹள்ளி ஆகிய, 6 இடங்களில், பூட்டிய வீடுகளை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 82 பவுன் தங்க நகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.