18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளுக்கு அடுத்து இறுதியாக டிடிவி தினகரன் அணி, ஓபிஎஸ்-இபிஎஸ் என்ற நிலை ஏற்பட்டது. பின்னர் தமிழக ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக மனு அளித்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் செப்டம்பர் 19 ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு செப்டம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கும் இணைந்து விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்தது.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என்றும், 18 தொகுதிகளை காலியானதாக கருதி தேர்தலை அறிவிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. அக்டோபர் 4ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார். ஓபிஎஸ் அணியினர் ஆட்சிக்கு எதிராக மனு அளித்ததாகவும், ஆனால் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டு துணை முதல்வராக ஓபிஎஸ் ஆன பின்னர் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் நடந்துள்ளதாகவும் சிங்வி வாதத்தின் போது குறிப்பிட்டார். இந்த வழக்கு அக்டோபர் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 18 எம்எல்ஏக்கள் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து செயல்பட்டது போல் குற்றம்சாட்டி தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அத்துடன் தங்கள் கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் 2ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆளுநர் மற்றும் சபாநாயகரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயம் என்பதால் அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைப்பதாக நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார். இந்த பரிந்துரை குறித்து தலைமை நீதிபதி அமர்வில் 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் முறையீடு செய்தார். இதனை அடுத்து பேரவை நிகழ்வுகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு நவம்பர் 16ம் தேதி விசாரணை செய்தது. அப்போது டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். மேலும் கொறடா உத்தரவை மதித்துதான் செயல்பட்டதாகவும் வாதிட்டார். முதல்வரை மாற்றக்கோரி மட்டுமே ஆளுநரிடம் மனு கொடுத்ததாக கூறி சிங்வி தனது வாதத்தை முன்வைத்தார்.
வழக்கு நவம்பர் 20ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அபிஷேக் சிங்வி மீண்டும் வாதத்தை தொடர்ந்தார். விளக்கம் அளிக்க 18 எம்எல்ஏக்களுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை, தினகரன் அணியில் இருந்து பழனிசாமி அணிக்கு மாறிய எம்எல்ஏ ஜக்கையன் மீதான நடவடிக்கையை கைவிட்டுவிட்டனர் என சிங்வி வாதிட்டார். வழக்கு விசாரணை நவம்பர் 27ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி வாதாடினார். டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து நிலைப்பாட்டை தெரிவித்த பிறகு தான், மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க கோரியதாக வாதிட்டார். அதிமுகவில் நீடிக்கும்போது எந்த காரணத்திற்காக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை என ராமன் வாதிட்டார். சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்ததும், மு.க.ஸ்டாலின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரியதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என வாதிட்டார். சபாநாயகருக்கு உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக ஆரியமா சுந்தரம் வாதத்தை முன்வைத்தார்.
டிசம்பர் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் சபாநாயகர் தரப்பில் ஆரியமா சுந்தரம் மீண்டும் ஆஜராகி வாதிட்டார். ஆளுநரிடம் அதிருப்தி கடிதம் கொடுத்து கட்சி விதியை மீறியதால் 18 பேரை தகுதி நீக்கியது சரியே என வாதிட்டார். இந்த வழக்கு டிசம்பர் 18ம் தேதி விசாரணைக்கு வந்தபோது எடியூரப்பா வழக்கையும், இந்த வழக்கையும் ஒன்றாகக் கருதக்கூடாது என்றும், அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு அந்த வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளதாகவும் ஆரியமா சுந்தரம் வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கு டிசம்பர் 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனுகொடுத்த அதே நாளில் தான் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியதாக கூறினார். வழக்கு ஜனவரி 9ம் தேதி விசாரணைக்கு வந்தபோது முகுல் ரோஹத்கி வாதத்தை முன்வைத்தார். கட்சியில் பொதுக்குழு, சட்டமன்றக்குழுக்கள் உள்ளபோது அதில் எதிலும் முறையிடவில்லை, சபாநாயகரிடமும் முறையிடவில்லை, ஆனால் நேரடியாக ஆளுநரிடம் மனு அளிப்பது கேலிக்கூத்தானது என ரோஹத்கி வாதிட்டார்.
ஜனவரி 10ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் கூட இல்லாத டிடிவி அணியினர், தாங்கள் தான் அதிமுக என உரிமை கோர முடியாது என வாதிட்டார். டிடிவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ்.ராமன் ஆளுநரிடம் மனு கொடுத்ததற்காக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது என்றும், கட்சியில் இருந்து மட்டுமே நீக்கம் செய்யமுடியும் என்றும் இறுதி வாதத்தை முன்வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவந்த நிலையில், ஜனவரி 23ம் தேதி எழுத்துப்பூர்வமாக வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கூடுதலாக ஏதாவது வாதங்களை தாக்கல் செய்யவிரும்பினால் ஜனவரி 29ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதியம் ஒரு மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.