18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு நாளை விசாரணை?
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை 3வது நீதிபதி சத்தியநாராயணன் நாளை விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 18 எம்எல்ஏக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் இறுதியில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால், மூன்றாவது நீதிபதியாக இந்த வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார் என்று சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டது. நீதிபதி விமலாவுக்கு பதிலாக வேறொரு நீதிபதியை நியமிக்க வலியுறுத்தியும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 17 எம்எல்ஏக்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் தங்கதமிழ்ச்செல்வன் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அருண் மிஸ்ரா அமர்வு, வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலாவுக்கு பதிலாக சத்தியநாராயணனை நியமனம் செய்தது. அத்துடன் மனுதாரர்கள் வழக்கைத் திரும்பப் பெற அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், மனுவைத் திரும்பப் பெற தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பு ஒப்புக்கொண்டது. இந்நிலையில் 3வது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை நாளை விசாரிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.