
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற குளம் சீரமைப்பு பணி முறையாக நடைபெறாததால் குளக்கரை சரிந்து விழுந்துள்ளது.
தமிழக அரசு ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி, வரத்து கால்வாய்களை சீரமைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து ஏரிகள், குளங்கள், வரத்து கால்வாய்கள் தூர்வாரி சீரமக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்திரம்பாக்கம் பகுதியில் உள்ள மாரிதாங்கல் குளக்கரையை சீரமைக்க அரசு, 18.32 லட்சம் நிதி ஒதுக்கியதாக தெரிகிறது.
ஆனால், அந்த குளக்கரை சீரமைக்கப்பட்ட சில நாட்களிலேயே மழையால் சரிந்து விழுந்ததுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரமைத்த ஒப்பந்ததாரரை அரசு அதிகாரிகள் முறையாக கண்காணிக்க தவறியதாலும், குளக்கரையை சுற்றி பெரிய கற்கள் எதுவும் போடாமல் வெறும் சிமெண்டை மட்டும் பூசி, அதன் மேல் பெயின்ட் அடித்து கணக்கு காட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசு நிதி 18.32 லட்சம் என்ன ஆனது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.