நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி... எடுத்த விபரீத முடிவு! கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி (வயது 17). இவர் நடப்பாண்டு பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (மே.04) செங்கல்பட்டு மாவட்டத்தில் நீட் தேர்வு நடைபெற்றது. முந்தைய நாள் இரவு வழக்கம் போல் இரவு படுக்கை அறைக்கு சென்று உள்ளார். இந்தநிலையில், தேர்வு எழுத தாம்பரம் செல்ல வேண்டும் என்பதால் அவர் தாயார் அதிகாலை நான்கு மணிக்கு மகளை எழுப்புவதற்காக மாணவி அறைக்கு சென்றார்
அப்போது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மேல்மருவத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மன உளைச்சல் காரணமாக அல்லது தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டார? என மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு நடைபெற்று வரும் இந்த சூழலில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தால் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில், தேர்தல் அரசியல் செய்ததாக திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், " இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் @arivalayam பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே? "ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்" என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது? வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எங்கே போனது? உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள் திரு. @mkstalin அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா? "நீட் ஒழிய வேண்டும் என்றால் '2.ஓ' வர வேண்டும்" என்று கூச்சமின்றி திமுக-வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, "உரிய மரியாதையுடன்" மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்! ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!" என்று தெரிவித்துள்ளார்.