காதலனை நம்பி ஏமாந்த சிறுமி - ஃபேஸ்புக் நட்பால் நடந்த விபரீதம்

காதலனை நம்பி ஏமாந்த சிறுமி - ஃபேஸ்புக் நட்பால் நடந்த விபரீதம்
காதலனை நம்பி ஏமாந்த சிறுமி - ஃபேஸ்புக் நட்பால் நடந்த விபரீதம்

ஃபேஸ்புக் மூலம் சிறுமி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர்கள் அர்ஜூனன் - காளியம்மாள் தம்பதியினர். இவரது முதல் குழந்தை சுவாச கோளாறு பிரச்னை காரணமாக 18 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தது. அந்த குழந்தையின் நினைவாக மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளார். நாளடைவில் மரம் நட்டு வளர்ப்பதை முழுநேர பணியாக செய்து வருகிறார். இதுவரை பல்வேறு இடங்களில் 4 லட்சம் மரங்கள் நட்டு வைத்து உள்ளார். அவர் மட்டுமின்றி அவரது மனைவியும் மகளும் கூடவே மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மகள் 10ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

மரங்கள் வளர்ப்பு இயற்கையை பாதுகாப்பது போன்ற  விஷயங்களை தெரிந்து கொள்ள தந்தை அர்ஜூனன் தனது மகளுக்கு புதிதாக ஆண்ட்ராய்ட்  போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் அவர் ஃபேஸ்புக் கணக்கை தொடங்கியுள்ளார். அதில் அவருக்கு நேர்ந்த அவலம் குறித்து அச்சிறுமி, “பேஸ்புக் மூலம் தென்காசி அடுத்த சொக்கம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது.

 பின்னர் வேலை வாங்கி தருவதாக என்னை அவர் சென்னைக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூர் அழைத்து சென்றார்.  அங்கு வாடகை அறை ஒன்றில் 4 நாட்கள் தங்க வைத்து தவறாக நடந்து கொண்டார். ஆசை வார்த்தை கூறி என்னை அழைத்து சென்றார். 

ஆனால், என்னை அவர் ஏமாற்றி விட்டு சென்றுவிட்டார். தற்போது தான் கர்ப்பமுற்று இருக்கிறேன். அவர் இதேபோல் வேறு பெண்கள் யாரையும் அவர் ஏமாற்றியிருக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை. என்னை போல் வேறு எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்பட கூடாது. எனவே அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இது குறித்து அந்த இளம் பெண்ணின் தந்தை, “கடந்த மாதம் இது குறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது மகள் பாதிக்கப்பட்டது போன்று வேறு எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்பட கூடாது. எனவே எனது மகளின் இந்த நிலைமைக்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். இது குறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் கேட்டபோது, சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படும் புகாரில் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com