தமிழகத்தில் பாம்பு கடித்து கடந்த 3 ஆண்டுகளில் 156 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் பேசிய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் இதனை தெரிவித்தார். கடந்த 2014ம் ஆண்டில் 37 பேரும், 2015ம் ஆண்டில் 74 பேரும், 2016ம் ஆண்டில் 45 பேரும் பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார். மேலும், அனைத்து மாநில அரசுகளும் பாம்பு விஷமுறிவு மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மலை மற்றும் மலைசார்ந்த மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் அதிகமாகவுள்ளதாகவும், கிராம மருத்துவமனைகளிலும், சுகாதார மையங்களிலும் பாம்பு விஷமுறிவு மருந்துகளை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தெரிவித்தார்.