மதுரை| தெருநாய் கணக்கெடுப்பில் அதிர்ச்சி.. 15,000 நாய்கள் குறைந்ததால் சந்தேகம்!
மதுரையில் தெருநாய்கனின் எண்ணிக்கை குறித்து 2020-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது, 53 ஆயிரத்து 826 தெருநாய்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பில் 38 ஆயிரத்து 348 நாய்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கை குறைந்ததால் சந்தேகம்..
தனியார் நிறுவனம் மற்றும் விலங்குகள் நல தொண்டு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அறிவியல்ரீதியாக இந்த கணக்கெடுப்பு நடைபெற்றதாக மாநகராட்சி கூறியுள்ளது. ஆனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் குறைந்துள்ளதாக தெரிவிப்பது பல்வேறு தரப்பிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பில் துல்லியத்தன்மை இல்லை என்றும் களப்பணியின் போது தங்களை புறக்கணித்துவிட்டதாகவும் உள்ளூரைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் கணக்கெடுப்பில் எந்தப்பிரச்னையும் இல்லை என்றும் விஞ்ஞான முறையில் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பின் வாயிலாக தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது..