திருப்பத்தூர்| திமுக பூத் கமிட்டி மாநாடு.. ரயிலில் வந்த முதல்வர் ஸ்டாலின்.. பிரமாண்ட ஏற்பாடு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ச்சியாக இம்முறையும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் நோக்கமாகவே திமுக தொடர்ச்சியான மாநாடுகளையும், கட்சி சார்ந்த விழாக்களையும் நடத்தி வருகிறது.
அந்தவகையில் தான், இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், இந்த மாநட்டில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 47 சட்டமன்ற வாக்குச்சாவடி முகவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர்கள் அமரும் இருக்கையில் கட்சி துண்டு மற்றும் நொறுக்கு தீனிகள், குடிநீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் வாக்குச்சாவடி முகவர்கள் க்யூஆர் கோட் கொடுக்கப்பட்டு அதன் மூலமாக ஸ்கேன் செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் வருகை
திமுக வடக்கு மண்ட வாக்குச்சாவடி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின், தொடர்வண்டி மூலம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டைக்கு வந்தார். அவருக்கு, ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவள்ளி, அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து திருப்பத்தூர் அரசு விருந்தினர் இல்லத்துக்கு செல்லும் வழியில் சாலை வலம் சென்று மக்களை சந்தித்தார். விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், மாலை 4 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வருகிறார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து பிருந்தாவன் விரைவு இரயில் மூலம் ஜோலார்பேட்டை வந்திருக்கும் நிலையில், இதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
