மதுரை | மோடி பங்கேற்கும் என்.டி.ஏ கூட்டணியின் பொதுக்கூட்டம்.. 150 ஏக்கரில் பிரம்மாண்ட ஏற்பாடு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கும் நிலையில், இதற்காக 2 நாள் பயணமாக நேற்று இரவு 9 மணியளவில் அகமதாபத்திலிருந்து தனி விமானம் சென்னை வந்தடைந்தார். அவரை, எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி, ஆளுநர் ஆ.என். ரவி மற்றும் தமிழக பாஜகவினர் வரவேற்றனர். இதையடுத்து, கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்றார். இரவு அங்கு ஓய்வெடுத்துள்ளார். இதன் காரணமாக, கிண்டி ஆளுநர் மாளிகை முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த சூழலில் தான், இன்று காலை 10.40 மணியளவில் சென்னையிலிருந்து கிளம்பி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லவுள்ளார். அங்கு, சுமார் 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் வரும் அவர், அங்கிருந்து விமானம் மூலம் மதுரை வரவிருக்கிறார். தொடர்ந்து, மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டதில் கலந்துகொள்ள இருக்கும் அவர், அதற்கு முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தரிசனம் செய்யவிருக்கிறார்.
இந்த சூழலில் தான், மதுரையில் இன்று விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அருப்புக்கோட்டை ரிங் ரோடு சந்திப்பு வலையங்குளம் முதல் விரகனூர் ரவுண்டானா வரை மற்றும் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் மதுரை விமான நிலையம் – அவனியாபுரம் – திருப்பரங்குன்றம் சாலை பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனரக சரக்கு வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் இரண்டாம் நாள் பயணமாக தமிழக வருகை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவோம் தேர்தலுக்கான வியூகங்களை அமைக்கவும் பிரதமர் தமிழகத்தில் முகாமிடுவதாக கூறுகின்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி, தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஜனவரி 23-ம் தேதி செங்கல்பட்டில் மோடி கலந்துகொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இது அக்கூட்டணிக் கட்சிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி செல்லவிருக்கிறார்.

