காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடகாவின் கபிணி அணையில் இருந்து காவிரியில் 15 ஆயிரம் கன அடி உபரி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மழைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல், கர்நாடகா மாநிலத்திலும் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குடகு, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கிருஷ்ண ராஜ சாகர், கபிணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு நீர் வரத்து 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கபிணி அணையை பொருத்த வரை அதன் முழு கொள்ளளவான 84 அடியில் 74 அடி வரை நிரம்பியுள்ளது. அணைக்கு 22 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. அதனால் கபிணி அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கபிணி அணியில் இருந்து 15 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் கூடுதலாக திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரானது பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் வந்து சேரும். அதேபோல், பெரிய அணையான கிருஷ்ணசாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டால் தமிழகத்திற்கு அதிக தண்ணீர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.